தொழிற்கல்வியை மேம்படுத்த 3 முறைகள் அமல்படுத்தப்பட உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பொறுப்பேற்றுள்ள வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், முனைவர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்கும் வகையில், பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள பாடத்திட்டம் 20 சதவீத மாணவர்களுக்கே புரியும் வகையில் உள்ளதாகவும், மீதமுள்ள 80 சதவீதம் பேருக்கு எது புரியுமோ, அதை கற்றுக்கொடுத்து, சுயதொழில் தொடங்கும் வகையில், மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்த 20 வருடத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து நோபல் பரிசு பெறும் வகையில், அடிப்படை ஆராய்ச்சி வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் வேல்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.







