பரந்தூரில் விமான நிலையத்தால் சென்னைக்கு குடிநீர் பிரச்சினை: பி.ஆர்.பாண்டியன்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படவில்லை என்றால் தீவிரமான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என…

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படவில்லை என்றால் தீவிரமான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்டுவதா என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் பல்வேறு ஏரிகள் பாதிக்கப்படுகின்றன. அரக்கோணம் விமானப்படை தளத்திற்கு 15 கிலோமீட்டருக்கு அருகில் எதற்கு புதிய விமான நிலையம் என்பது தான் எங்கள் கேள்வியாக உள்ளது. சென்னையில் நமக்கு தேவையான வசதிக்கேற்ப விமான நிலையம் உள்ளது. அங்கு பயணிகள் வந்து செல்வதில் சிரமம் உள்ளதா அதில் வசதிகள் குறைப்பாடு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

உளுந்தூர்பேட்டையில் தான் விமான நிலையம் அமைக்க வேண்டும், அங்கு தரிசு நிலமாக உள்ளது. ஆனால், அங்கு மட்டும் ஏன் விமான நிலையம் அமைக்க முயற்சி செய்யவில்லை. பரந்தூர் பகுதியில் பல ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தை நம்பி உள்ளது.

விவசாயத்தை அழித்து விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற அவர்,
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால் என்னை யாரும் கைது செய்யவில்லை. எனது கார் கைப்பற்றப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் எனது காரை கைப்பற்றியது. என்னை கைது செய்தனர். நான் என்ன சமூக விரோதியா இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? இல்லை சுயநலமாக திமுக ஆட்சி நடக்கிறதா” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், “பரந்துரில் விமான நிலையம் அமைத்தால் சென்னைக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படவில்லை என்றால் தீவிரமான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.