நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் 9 பேர் குழு: முதலமைச்சர் உத்தரவு!

நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய…

நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, 9 பேர் கொண்ட அந்த குழுவின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அந்த குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழுவில், டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழுவின் மற்றொரு உறுப்பினரான மருத்துவ கல்வி இயக்ககக் கூடுதல் இயக்குநர், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது, நீட் தேர்வு குறித்து உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் எனவும், பின்தங்கிய மாணவர்களின் நலனை காத்திட தேவையான பரிந்துரைகளை ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.