திருப்பூர் மாவட்டம் பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தப்பியோட முயற்சித்த நிலையில் அவனைகாவல்துறையினர் சுட்டு பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குடியிருப்பு பகுதியில் வெங்கடேசன் மது அருந்தியதாகவும் அதை, செந்தில்குமாரின் உறவினரும் பாஜக பிரமுகருமான மோகன்ராஜ் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார், அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லமுத்து (24), சோனை முத்தையா ஆகிய இருவரை கைது செய்தனர்.
முக்கிய நபரான ராஜ்குமார் (வெங்கடேசன்) என்பவரை திருச்சி முக்கொம்பு அருகே தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது. திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் அவர் சரண் அடைந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியானது.
அவனிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளான். இதையடுத்து அவனை தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்று ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வேனில் அழைத்து சென்ற போது சிறுநீர் கழிக்க வேண்டும் எனறு கேட்டு அங்கிருந்து வெங்கடேசன் தப்பி செல்ல முயன்றுள்ளான். இதனையடுத்து அவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காலில் காயம் அடைந்த அவன் சிகிக்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
இதனிடையே ராஜ்குமார் அவரது அண்ணனின் ஓட்டு உரிமைத்தை வைத்துக்கொண்டு வெங்கடேஷ் என பெயரை மாற்றி அப்பகுதியில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.







