பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக “ ஜெய்ஸ்ரீராம்” முழக்கம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளன.
முதல் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான் அணியின் அப்துல்லா மற்றும் இமாம் உல்-ஹாக் களமிறங்கினர். தொடர்ந்து 155-3, 162-4, 166-5, 168-6, 171-7 என்ற கணக்கில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி சற்று தடுமாறியது. தொடர்ந்து 39வது ஓவர் முடிவில் நவாஸ் 14 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியாக 42.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த பாபர் அஜாம் 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா தனது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் பவுண்டரியுடன் ரன் வேட்டையை தொடங்கினார் ரோஹித் ஷர்மா. அதிரடியான தொடக்கத்தை தந்து 16 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஷாகின் அப்ரிடி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் ஷர்மா – கோலி இணைந்து பாகிஸ்தான் பவுலர்களின் பந்து வீச்சில் பவுண்டரி சிக்ஸர்களை பறக்க விடும் நிலையில் 6.4 ஓவரில் இந்தியா 50 ரன்களை கடந்தது.
அதனைதொடர்ந்து ஹசான் அலி வீசிய பவுன்சர் பந்தில் சிக்கி விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கோலி 16 ரன்கள் அடித்து நடையை கட்டினார். அதிரடியாக பேட் செய்து வந்த ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். ரோஹித் ஷர்மா – ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து ஆட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை அவர்கள் எடுத்திருந்தனர்.
21.4 ஓவரில் ரோகித் சர்மா 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வந்தார். பின்னர் 25 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் எடுத்தது இந்திய அணி. 30.2 வது ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் உலகக்கோப்பை போட்டிகளில் தனது முதல் 50 ரன்களை பதிவு செய்தது மட்டுமின்றி இந்திய அணியை வெற்றி கனியை பறிக்கவும் செய்தார். 30 ஓவர்களில் தனது இலக்கை அடைந்து இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியிடையே பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது அவரை நோக்கி இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பலரது மத்தியில் கடும் கண்டங்களை எழுந்துள்ளது.
இந்த நிலையில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது..

“விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதை ஏற்க முடியாது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







