வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் 1928-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.
14 வயது குமரன் பாட்டு என்ற கவிதை தொகுப்பு மூலம் பிரபலமடைந்தார். நடிகர் நாகேஷின் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்கள் மனதை கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், வில்லிசைப் பாட்டுக் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன்.
இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று “வில்லிசை வேந்தர்” எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம். அவரின் இழப்பால் துயரில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் வில்லுப்பாட்டை கொண்டு சேர்த்தவர். தேசபக்தி பாடல்களையும் மற்றும் ஆன்மிகப் பாடல்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவரன் திறமையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. அவர் என்மீது தனிப்பட்ட அன்பும், பாசமும் கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழர்களின் பாரம்பரிய கலையான வில்லிசையின் மாபெரும் கலைஞர் பதம்ஶ்ரீ கலைமாமணி சுப்பு ஆறுமுகம் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது என இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறப்பு கலை உலகிற்கும் தமிழ் உலகிற்கும் மிகப் பெரிய ஒரு இழப்பு. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்:
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர் என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். வில்லு பாட்டில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் தெரிவித்துள்ளார். இதேபோல், அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








