தமிழகத்தில் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை நவீனப்படுத்துவது, புதிய விமான நிலையங்களை விரைந்து தொடங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக எம்.பி வில்சன் குரல் எழுப்பினார்.
மாநிலங்களவையில் இன்று பூஜ்யம் நேரத்தில் பேசிய வில்சன், ”ஒரு மைல் ஹைவே உங்களை ஒரு மைல்தான் அழைத்துச் செல்லும், ஆனால் ஒரு மைல் ரன்வே உங்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்” என்ற விமான சேவையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் சொல்லாடலை எடுத்துக்கூறினார். வளர்ச்சி தொடர்பான எந்த அளவு கோலிலும் முதல் மூன்று இடத்திற்குள் இருக்கும் தமிழ்நாடு சர்வதேச தரத்திலான விமான நிலையங்களைப் பெற அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பதாக வில்சன் கூறினார்.
தமிழ்நாட்டில் அதிக அளவு உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான போக்குவரத்து நடைபெறும் சென்னை விமான நிலையம் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களுக்கு இணையாக நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய வில்சன், ஆனால் அவ்வாறு நவீனமயமாக்கப்படாததால் தமிழ்நாடு தொழில் இழப்புகளை சந்திப்பதாக தெரிவித்தார்.
பரந்தூரில் அமைய உள்ள இரண்டாவது விமான நிலையம் தென் இந்தியாவின் வர்த்தக மையமாக சென்னை மாறும் அளவிற்கு சர்வதேச வசதிகளுடன் அதிநவீனமாக அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அந்த பணிகளை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் துரிதபடுத்த வேண்டும் என்றும் மாநிலங்களவையில் திமுக எம்.பி.வில்சன் எடுத்துரைத்தார்.
13 தென் மாவட்டங்களுக்கான நுழைவு வாயிலாக மதுரை விளங்குவதை சுட்டிக்காட்டிய வில்சன், மதுரை விமான நிலையத்திலிருந்து பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு நேரடியாக விமானப் போக்குவரத்து இல்லை எனக் குறிப்பிட்டார். இதனால் தென் மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி போன்றவற்றில் பின் தங்கியிருப்பதாக வில்சன் கூறினார். சர்வதேச விமானபோக்குவரத்திற்கான அழைப்பு விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்றவும், அங்கு சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து தடையின்றி நடப்பதற்கு உரிய அதிகாரியை நியமிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் வலியுறுத்தினார். திருச்சி, கோவை விமான நிலையங்களின் ரன்வேக்களை மேம்படுத்தி அந்த விமான நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெய்வேலி, வேலூர், தஞ்சை, ராமநாதபுரம், ஓசூர் ஆகிய நகரங்களிலிருந்து விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வில்சன், அங்கு விமான சேவையை விரைந்து தொடங்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.







