பணவீக்கம் உயர்வு – மத்திய நிதியமைச்சர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.   ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி,…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

 

ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. பணவீக்கம் 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு வைத்துள்ள நிலையில், உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதே சில்லறை பணவீக்கம் உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

ஆனால், ஆகஸ்ட் மாதத்துடன் எட்டு மாதங்களாக தொடர்ந்து பணவீக்கம் வரம்புக்கு மேலே உள்ளது. அதிலும், சில்லறை பணவீக்கத்தில் உணவு பணவீக்கமே பெரும் பகுதி வகிக்கிறது. ஆகஸ்ட் மாதம் உணவு பணவீக்கம் 7.62 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பணவீக்கம் குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உணவுப் பொருட்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இப்போது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

 

-இரா.நம்பிராஜன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.