2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வந்தால் ஆதரிக்க மாட்டேன்-ஒவைஸி

இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும்,…

இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும், சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், பூர்விக குடிகளும் மக்கள் தொகையை அதிகரித்து அதை சமநிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று சட்டம் வந்தால் அதை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். சீனா செய்த தவறை நாமும் செய்துவிடக் கூடாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக அதுபோன்ற சட்டங்கள் கொண்டுவரப்படாது என்று உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சரும் கூறியிருக்கிறார்.

கருத்தடை மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் முஸ்லிம்கள் தான்.
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் அதனால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் கிடைக்காது.

கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்கு அது சரியாகிவிடும். முஸ்லிம்கள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் இல்லையா? உண்மையாகப் பார்த்தால் பழங்குடியினரும், திராவிடர்களுமே பூர்வக் குடிகள் என்றார் ஒவைஸி.

ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சுமார் 138 கோடி மக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் சுமார் 140 கோடி மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட முதல் நாடு சீனா. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.