ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டு மகன்களும் அதிமுகவிலிருந்து நீக்கம்- எடப்பாடி பழனிசாமி அதிரடி

ஓ.பன்னீர் செல்வத்தையடுத்து அவரது இரண்டு மகன்களையும் அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி…

ஓ.பன்னீர் செல்வத்தையடுத்து அவரது இரண்டு மகன்களையும் அதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

கடந்த ஜூலை 11ந்தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சியில் நியமனங்கள், நீக்கங்கள் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை இன்று ஒரே நாளில் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி, ஓ,பன்னீர் செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத், ஓ.பன்னீர் செல்வத்தின் மற்றொரு மகன் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன், ஆகிய 5 மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக வர்த்தக அணி செயலாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம் சக்தி சேகர் ஆகியோரையும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்பது முதல் இபிஎஸ் தரப்பினர் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வந்த அதிமுக செய்திதொடர்பாளர் கோவை செல்வராஜ்-ம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  ஓபிஎஸ்க்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கட்சியின் மற்றொரு செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழிலின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ்-ம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக் குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் அம்மன் பி.வைரமுத்துவுக்கு எதிராகவும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. புரட்சி தலைவி பேரவை துணைச் செயலாளர் டி.ரமேஷ, தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டலச் செயலாளர் வினுபாலன், வடசென்னை வடக்கு (மேற்கு ) மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் கொளத்தூர் டி.கிருஷ்ண மூர்த்தி, தென்சென்னை தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சைதை எம்.எம்.பாபு, அதிமுக செயற்கழு உறுப்பினர் அஞ்சுலட்சுமி ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செவ்வமும், அவரது முக்கிய ஆதரவாளரான வைத்திலிங்கமும் ஜூலை11ந்தேதி  நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிவலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ் மகன்கள் மற்றும்  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து எந்நேரமும் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.