காஷ்மீரில் 5,500 பண்டிட்டுகளுக்கு அரசு வேலை: மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, இதுவரை 5,500க்கும் மேற்பட்ட பண்டிட்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய…

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, இதுவரை 5,500க்கும் மேற்பட்ட பண்டிட்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த சட்டப் பிரிவு 370, கடந்த 2019, ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரான பண்டிட் சமூகத்தவர்களில் 5,500க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அரசின் பல்வேறு துறைகளில் அவர்கள் பணி அமர்த்தப்பட்டிப்பதாக நித்யானந்த ராய் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு இதுவரை பண்டிட்டுகள் யாரும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறவில்லை என தெரிவித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு அங்கு இதுவரை 128 பாதுகாப்புப் படையினரும் 118 பொதுமக்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட பொதுமக்களில் 5 பேர் பண்டிட் சமூகத்தவர்கள் என்றும், 16 பேர் பிற இந்து மற்றும் சீக்கிய மதத்தவர்கள் என்றும் யாத்ரீகர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவைக் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய மற்றொரு கேள்விக்கு, ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து குறைந்துள்ளதாக நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு 417 தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ள அவர், இது கடந்த 2019ல் 255 ஆகவும், 2020ல் 244 ஆகவும், 2021ல் 229 ஆகவும் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 91 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள நித்யானந்த ராய், இது 2019ல் 80 ஆகவும், 2020ல் 62 ஆகவும், 2021ல் 42 ஆகவும் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதேபோல், 2018ல் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டதாகவும், இது 2019ல் 39 ஆகவும், 2020ல் 37 ஆகவும், 2021ல் 41 ஆகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மையினரின் நிலை குறித்த மல்லிகார்ஜூன கார்கேவின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள நித்யானந்த ராய், கடந்த 2 மாதங்களில் சிறுபான்மை பண்டிட் சமூகத்தினருக்கு எதிராக 2 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பண்டிட் சமூகத்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.