குழந்தை திருமணம் செய்த 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார்.
அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்திருந்தார். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுருகின்றனர். அசாமில் உள்ள நிறைய மாவட்டங்களில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்கின்றனர். இந்நிலையில்தான் அசாம் அரசு குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்திய பின்னர் பார்பேட்டா மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பால் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 4004 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அசாம் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைத் திருமணம் குறித்த புள்ளி விவரங்கள் முதல் தடுப்பு நடவடிக்கை வரை தெரிவித்துள்ளார். .
https://twitter.com/himantabiswa/status/1621380042092847104?s=20&t=mEfEPdsr2fD7ePoTx5Ht-g
இந்நிலையில், குழந்தைத் திருமணம் செய்த 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தற்போது கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது அசாம் போலீஸார் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








