2026ல் நமது எண்ணம் நிச்சம் நிறைவேறும் என பாமக பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கபட்டார்.
25 ஆண்டுகாலம் அக்கட்சியின் தலைமை பண்பை வகித்து வந்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, தனது பணி சிறப்பாக முடிவுற்றது எனவும், இனி வரும் காலங்களில் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்வதை அடிப்படையாக கொண்டு, பாமக 2.0 திட்டம் செயல்படுத்த பட உள்ளதாகவும், அன்புமணி ராமதாஸ் இனி பாமகவின் தலைவராக செயல்படுவார் எனவும் தீர்மானம் வாசித்தார்.
அதனை தொடர்ந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார். அப்போது, ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் போது கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என சொல்லி கொண்டு செல்வார்கள். 43 ஆண்டுகள் நான் கல்லும், முள்ளும் மெத்தையாக நினைத்து தமிழ்நாட்டில் உள்ள பரவலான கிராமங்களுக்கு சென்று அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து உள்ளேன். தற்போது இந்த அளவிற்கு பாமக வளர்ச்சியடைந்துள்ளதை பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன். ஆனால் நீங்களும் இந்த கட்சியை வளர்திருக்க வேண்டாமா என தொண்டர்களை பார்த்து ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2012ல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி 2013ல் ஆட்சியை பிடித்தது. படிப்படியாக இப்போது பஞ்சாபையே பிடித்து விட்டார்கள். இது உங்களால் ஏன் முடியவில்லை. இதுபோன்ற அற்புதமான கொள்கைகளை இந்தியாவில் வேறு ஏதாவது கட்சி வைத்து இருக்கிறதா? அப்போது ஏன் வெற்றிபெறவில்லை? இனி இந்த குற்றத்தை செய்வீர்களா? அதற்காக தான் உங்களுக்காக புதிய தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.
ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்ய சொன்னோம். அதனை துவங்கி வைக்க இந்த ராமதாஸ் வருகிறான் என்று நான் சொன்னேன். ஆனால் என்னை யாராவது அழைத்தீர்களா?
நான் 43 ஆண்டுகாலம் உழைத்துள்ளேன். இன்றும் உழைத்து வருகிறேன். நான் முன்பு இதே இடத்தில், உங்களிடம் பேசிய போது சொன்னேன். இன்னும் இரண்டு மாதத்தில் நான் 83 வயதை கடந்து விடுவேன். கோலூன்றியாவது நான் பாடுபடுவேன் என சொன்னேன். ஆனால் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் 40 ஆகவில்லை ஏன்?
திமுக ஒரு கட்டுப்பாடான இயக்கம், ஒரு கட்சி. ஆனால் எல்லா கட்சிகளை விட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் நம் கட்சியில் தான் அதிகம் இருக்கிறார்கள். பொறுப்புகள் எதுவும் எனக்கு தேவையில்லை, ஆனால் என்னால் 100 ஓட்டுகள் வாங்க முடியும் என்று கூறி, அன்புமணியை முதல்வர் ஆக்குபவன் தான் உண்மையான பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன். அவனுக்கு எத்தனை பதக்கங்கள் கொடுத்தாலும் ஈடாகாது.
இத்தனை காலம் கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர் ஜி.கே.மணி. அவருக்கு பாமக கௌரவ தலைவர் என்ற பொறுப்பை வழங்குகிறோம். ஆரம்பத்தில் சில செய்திகளை சூசகமாக சொன்னேன். தற்போது விரிவாக சொல்றேன். தலைவர், கௌரவ தலைவரை தவிர, மற்ற பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலும், தவறு செய்ய நேர்ந்தாலும், அவர்களை நீக்கி விட்டு புதிதாக வேறு ஒரு நபரை நியமிப்பேன் என தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு என்னை பற்றி தெரியும்! 43 ஆண்டு கால உழைப்பிற்கு ஈடுகட்டும் வகையில் நீங்களும் முன்னேறி செல்லுங்கள், 2026 இல் நமது எண்ணம், நிச்சயம் ஈடேறும் என அவர் பேசினார்.
முன்னதாக பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற உடன், கட்சியின் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேடையில் கட்டித் தழுவி அன்புமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் ராமதாஸ். ரசிகர்களும் மாலை அணிவித்து, பூங்கொத்துகள் கொடுத்து அன்புமணி இராமதாசுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாமக சார்ந்த சங்கங்கள், அமைப்புகள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், பாமக நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.









