இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்திருந்தால், நமது நாடு பிளவுபட்டிருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் கடந்த சனிக்கிழமை அன்று தொழிலகக் கூட்டமைப்பான அசோசேம் சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நமது இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை சந்தித்தது. அதற்கு மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்று நிறைய தலைவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி இருக்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் பிரிட்டிஷ்காரா்களை எதிா்த்து உறுதியுடன் போராட வேண்டும். அதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தயாராக இருந்தாா். நமது சுதந்திரத்தை யாசகம் கேட்பதைப் போல, ஆங்கிலேயர்களிடம் இருந்து கேட்டு பெறுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அரசியல் ரீதியில் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார, கலாசார ரீதியிலும் மக்கள் விடுதலை அடைய வேண்டுமென அவா் விரும்பினாா். அனைத்து நிலைகளிலும் மக்களின் மனநிலை மாறி, சுதந்திர வானில் பறக்கும் பறவைகளைப் போல அவா்கள் இருக்க வேண்டுமென நேதாஜி விரும்பினாா். நாட்டுக்காக மகாத்மா காந்தியை எதிா்க்கவும் நேதாஜி தயாராக இருந்தாா். அதே வேளையில், காந்தியடிகள் மீது நேதாஜி பெரும் மதிப்பு கொண்டிருந்தாா். சுதந்திரம் தனது உரிமை என முழங்கிய நேதாஜி, அதை அடைந்தே தீருவேன் என உறுதியேற்றிருந்தாா்.
நேதாஜி இருந்திருந்தால், நாடு பிளவுபட்டிருக்காது. நேதாஜியின் கருத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என முகமது அலி ஜின்னாவே கூறியிருக்கிறாா். இந்தியாவுக்காகப் பெரும் பங்களிப்பை நேதாஜி வழங்கியுள்ளாா். அவரைப் போல வீரம் கொண்ட, அவருக்கு இணையான தலைவா்கள் உலக அரங்கிலும் வெகுசிலரே. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவா் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாா். பின்விளைவுகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அவா் எதிா்த்தாா். அவா் வாழ்நாள் கடைசி வரை வீரத்தைக் கைக்கொண்டிருந்தாா். ஈடுஇணையற்ற தைரியத்தையும் உறுதிப்பாட்டையும் அவா் வெளிக்காட்டினாா். பலதரப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்கும் திறனை நேதாஜி பெற்றிருந்தாா். அவா் மறைந்த இத்தனை ஆண்டுகளை கடந்தும் அவரின் தாக்கம் தொடா்ந்து கண்டே வருகிறது என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








