தமிழகத்தை வளப்படுத்துவதே எங்கள் கடமை-ம.நீ.ம. தலைவர் கமல் ஹாசன்

தமிழகத்தை வளப்படுத்துவதே எங்கள் கடமை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்ட கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி…

தமிழகத்தை வளப்படுத்துவதே எங்கள் கடமை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்ட கோவை தெற்குத்
தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜக சார்பில் வானதி
சீனிவாசன் போட்டியிட்டனர்.

இதில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற நிலையில், தான் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதிக்கு நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகை புரிந்தார். முதலில் தேர்முட்டி பகுதியில் உள்ள துணி வணிகர் அரசு பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பானை வழங்கிய கமல்ஹாசன் மாணவிகளிடையே உரையாற்றினார். அப்போது, “நான் நல்ல வசதி படைத்த பள்ளியில் பயின்றாலும் கல்வியை தொடரவில்லை. ஆனால் நீங்கள் எல்லாம் வசதி இல்லாமலும் கூட சிறப்பாகப் படித்து அதற்கான அடையாளத்தையும் சிறப்பையும் பெற்றுள்ளீர்கள்.

மேலும், இந்த பள்ளியில் தான் கழிவறை கட்டித் தருவதாக தாங்கள் முன்வந்த நிலையில், தற்போது அரசே கழிவறை கட்டித்தர முன்வந்துள்ளதால், இங்கே கட்டுவதாக இருந்த கழிவறை வசதியை அருகில் உள்ள கெம்பட்டி காலனி பகுதிக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறியவர் இது தேர்தல் வாக்குறுதி அல்ல, ஒரு தமிழனின் கடமை” என தெரிவித்தார்.

எங்களுடைய கடமை எல்லாம் தமிழகத்தை வளப்படுத்துவதுதானே தவிர எங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல என கூறினார்.

கடைசி நான் சென்ற பள்ளியில் அரசு அதிகாரிகள் தன்னை வெளியேற்றியதாக குறிப்பிட்ட கமல்ஹாசன், இந்தப் பள்ளியில் கண்ணியமாக நடத்தினார்கள் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கெம்பட்டி காலனி பகுதியில் பொதுமக்களை சந்தித்துப் பேசிய
கமல்ஹாசன், “இதற்கு முன் கெம்பட்டி காலணி பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் சென்ற
பிறகு அடுத்த நாள் இந்த இடத்தை புல்டோசர் வைத்து சுத்தம் செய்தனர்.

ஏதாவது ஒரு வகையில் பொதுமக்களுக்கு நல்லது நடப்பது எங்களுக்கு
மகிழ்ச்சி. 800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் ஒரே ஒரு
கழிப்பறை உள்ளது என கேள்விபட்டோம். இந்தப் பகுதியில் 7 புதிய
கழிப்பறைகள் கட்டி உள்ளோம். இது தேர்தல் வாக்குறுதி அல்ல, 800 குடும்பங்களும்
என் குடும்பங்கள் என்பதால் செய்து தருவதோடு அது தங்களின் கடமை” என தெரவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

பொதுமக்கள் நடக்கக்கூடிய விஷயங்களை மனுவாக கொடுங்கள். அதில் என்னென்ன முடியுமோ அதை நாங்கள் செய்து தருகிறோம். இதற்கு முன் கிராம சபை கூட்டங்களை தூசி தட்டி மறுஅறிமுகம் செய்த நிலையில் தற்போது அது நடந்து பெறும்
தொடர்நிகழ்வாக இருப்பது போன்று நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

இதேபோன்று அம்மன் குளத்திலும் எங்களுக்கு குடும்பம் இருக்கிறது. அங்கேயும்
நாங்கள் செல்வோம். அவர்களுக்கும் எங்களால் இயன்றதை செய்து தருவோம்.
கெம்பட்டி காலணி பகுதியில் குடிநீர் வசிதி செய்து தர ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இது உங்களுக்கும் எனக்குமான தொடர்பு. இது அரசியலுக்கும் எனக்குமான
தொடர்பைத் தாண்டி, இந்த சமூகத்திற்கும் எனக்குமான தொடர்பு. நாங்கள் செய்வது ஒரு உதவி என நீங்கள் நினைத்தால் எனக்கு நீங்கள் ஒரு கைமாறு செய்ய வேண்டும்.

நாங்கள் கட்டி கொடுக்கும் கழிப்பறை நம்முடைய கழிப்பறை. அதை  சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான இடமாக வைத்திருக்க வேண்டும். அது சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்வையிட நான் வரும்போது சரியாக இல்லையென்றால் துடப்பத்தை தானே கையில் எடுத்து சுத்தம்
செய்வேன்.  தூய்மைதான் என் பணி என்றார் கமல்ஹாசன்.

இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுகொண்ட கமல்ஹாசன் குழந்தைக்கு பெயர் வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.