மெட்ராஸ்…நம்ம மெட்ராஸ்….384-வது தினம் கொண்டாட்டம்…!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வயது 384. இந்த சென்னை தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. . புலியூர் கோட்டம் புலியூர் கோட்டம் முதலாவதாக, 2000 வருடங்களுக்கும் அதிகமான பழமையான வரலாறு கொண்டது மெட்ராஸ் என்கிறார்கள்.…

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வயது 384. இந்த சென்னை தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. . புலியூர் கோட்டம் புலியூர் கோட்டம் முதலாவதாக, 2000 வருடங்களுக்கும் அதிகமான பழமையான வரலாறு கொண்டது மெட்ராஸ் என்கிறார்கள். எழும்பூர், மயிலாப்பூர், சாந்தோம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருவான்மியூர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம் இப்படிப்பட்ட பகுதிகள் எல்லாம் அன்றைய காலங்களில் தனித்தனி பெயர்களில் இல்லாமல், மொத்தமாக சேர்த்து புலியூர்க்கோட்டம் என்றே அழைக்கப்பட்டது. 2000 வருடங்களுக்கு முன்பே குரும்பர்கள் எனப்படுபவர்கள் இங்கு ஆட்சி செய்ததாக வரலாற்று சான்றுகளும் உள்ளன.

இந்த குரும்பர்களுக்கு பிறகு தான், சோழர்கள், பல்லவர்கள் என்று அடுத்தடுத்து பலரும் வந்து, கடைசியில் ஆங்கிலேயரின் கைக்கு சென்றிருக்கிறது. அப்படியானால் மெட்ராஸின் வயது என்ன? நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

“வந்தாரை வாழவைக்கும் சென்னை” என அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அடிப்படையாக முன் வைக்கப்படும் ஆண்டு தான் 1639. அப்போது தான் கிழக்கு இந்திய கம்பெனியானது, தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி, சென்னை நகரத்தை உருவாக்கத் தொடங்கியது. தாமல் வெங்கடப்பா மற்றும் தாமல் அய்யப்ப நாயக்கர்களின் தந்தையான சென்னப்ப நாயகரின் பெயராலேயே சென்னை என்று அழைக்கப்படுகிறது.

கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்புகள் சுற்றி எழுப்பப்பட்டன. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. 1688ல் சென்னை, முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் சென்னை இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக சென்னையை பயன்படுத்தினார். பின்னர் பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்பு பகுதியில் சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. சென்னப்பட்டினம் ஆங்கிலேயர் வசம் வருவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே டச்சுக்காரர்களால் மதராஸ் என்று சொல்லப்பட்டது. மாதரசன் பட்டினத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்புக்கு வசதியாக ’மதராஸ்’ என்று அழைத்தார்கள் .

அது காலப்போக்கில் மக்களின் உச்சரிப்பால் மருவி, மெட்ராஸ் என மாறிப் போனது. ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு மெட்ராஸ் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் மெட்ராஸ் உடன் இணைக்கப்பட்டன.

1639 ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் சென்னை மாநகரம்  உருவானது. இந்திய விடுதலைக்குப் பிறகு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, மெட்ராஸ் மாகாணம் 1969ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தலைநகரான மெட்ராஸ், 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ‘சென்னை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுமார் ஒரு கோடி மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. இன்று உலக அளவில் மிக முக்கியமான நகரமாக திகழ்கிறது சென்னை. உலகின் மருத்துவ தலைநகரம் இதுதான். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற அடைமொழியோடு கம்பீரமாக நிற்கிறது சென்னை!

இந்த மெட்ராஸின் சிறப்புக்கள் அனைத்தையும் பட்டியலிட்டு சொல்லிவிட முடியாது. எந்த தொழிலுமே செய்வதற்கான இடமாக விளங்க தொடங்கியது மெட்ராஸ்தான். எந்த மொழியும் காற்றில் கரைந்து உலவும் இடமானது மெட்ராஸ்தான். எந்த இன மக்களும் இயல்பாக நடமாடும் உரிமையை தந்தது மெட்ராஸ்தான். தங்கள் ஊர்களில் செய்துவரும் விவசாயம், தொழில், என எது படுத்துவிட்டாலும் என்ன, இருக்கவே இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதும் மெட்ராஸ்தான்.

மெட்ராஸ் என்ற தாய், வந்தாரை வாழ வைப்பவள், காலங்கள் உருண்டபோதும் தாய்மை எனும் இயல்பை ஒருபோதும் அவள் மாற்றி கொண்டதே கிடையாது. ஹைடெக் தொழில் முதல் கூலி வரை என தன்னை நம்பி வந்த அனைவரையுமே தாங்கி பிடிப்பாள். நம்பி வந்தோருக்கு சென்னை இருகரம் கூப்பி வரவேற்று மடியில் இளைப்பாற இடம் தருவாள். பழமையும் புதுமையும் கலந்து காலத்துக்கும் புகழ் பரப்பி வரும் மெட்ராஸின் பிறந்த நாளை சென்னைவாசிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.