”உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இருப்பேன் என எதிர்பார்க்கவில்லை“ – செஸ் வீரர் பிரக்ஞானந்தா பேட்டி!

”உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் இருப்பேன் என்பதை சிறுதும் எதிர்பார்க்கவில்லை. அனைத்து முயற்சிகளை கொடுத்து இறுதிப் போட்டியில்  விளையாடுவேன்“  என செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை…

”உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் இருப்பேன் என்பதை சிறுதும் எதிர்பார்க்கவில்லை. அனைத்து முயற்சிகளை கொடுத்து இறுதிப் போட்டியில்  விளையாடுவேன்“  என செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இன்று நிறைவடைகிறது. இதன், அரையிறுதியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ கருவானாவை எதிர்கொண்டார். முதல் 2 ஆட்டங்களும் சமனில் முடிவடைந்து, ”டை பிரேக்கர்” ஆட்டம் நடத்தப்பட்டது.

இதில் பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பெற்றார். இன்று நடைபெற உள்ள  இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை அவர் எதிர்கொள்ள உள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிரக்ஞானந்தா தெரிவித்ததாவது..

” இந்த உலகக்கோப்பை தொடரில் மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடுவேன் என நான் சிறுதும் எதிர்பார்க்கவில்லை. நான் அவருடன் விளையாடுவதற்கான ஒரே வழி இறுதிப்போட்டி தான்; அந்த இறுதிப் போட்டியில் நான் இருப்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும்  இறுதிப் போட்டியில் கொடுத்து விளையாடுவேன்” என தெரிவித்தார்.

இதனிடையே, பிரக்ஞானந்தாவின் இறுதிப் போட்டி குறித்து அவரது ஆலோசகர் மற்றும் பயிற்சியாளரான, கிராண்ட் மாஸ்டர் ராமச்சந்திரன் ரமேஷ் உடன் நமது செய்தியாளர் நாகராஜன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

” மிக குறைந்த வயதில் உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய ஒரே வீரர் பிரக்ஞானந்தா. பலம் வாய்ந்த மேக்னஸ் கால்சனை எதிர்கொள்வது சவாலான ஒன்று. இரவு முழுவதும் நன்றாக தூங்கி எழுந்து போட்டியை எதிர்கொள்ள உள்ளேன் என பிரக்ஞானந்தா என்னிடம் தெரிவித்தார். “ என பயிற்சியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.