தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க தயக்கம் காட்டும் ஓடிடி நிறுவனங்கள் : பின்னணி என்ன..?

தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும்…

தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ சமீபத்தில் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.

நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்கும் சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார் .

”தமிழ்நாட்டில்  மாநிலம் முழுவதும் மொத்தமாக 19 திரையரங்குகளில் இந்த திரைப்பபடம் வெளியிடப்பட்டது. மேலும் திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆனால், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையிடவில்லை. வரவேற்பு இல்லை என்பதால் திரையரங்குகளில் படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டார்கள். அதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது” என  உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டை வாங்குவதற்காக எந்த ஓடிடி நிறுவனங்களும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் கதை, அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சில பிரிவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.