26 C
Chennai
December 8, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரியில் சிலை நிறுவப்படும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் பிரதமர், சமூக நீதிக் காவலர் பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த வி.பி.சிங்கிற்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கடந்த  ஏப்ரல் 20-ஆம் தேதியன்று சட்டமன்றப் பேரவை விதி-110-ன் கீழ் அறிவித்தார்.

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீந்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள், செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர்.

பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார்.

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு, அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.

தமிழ்நாட்டை தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்த வி.பி.சிங், தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக் கொண்டார்.

ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது “அவமானம்”. இந்த அவமானத்தை துடைக்கும் மருந்துதான் பெரியாரின் “சுயமரியாதை” என்ற சொன்னவர் வி.பி.சிங். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தனது சொந்த சகோதரர் போல் மதித்தவர். தனது ஆட்சியைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் மு.கருணாநிதி என்று பாராட்டியவர் வி.பி.சிங்.

அத்தகைய சமூக நீதிக் காவலருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று, ஏற்கனவே ஏப்ரல் 20-ஆம் தேதியன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கு இணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று, அரசு அதனை பரிசீலித்து “சமூக நீதிக் காவலர்” வி.பி.சிங்கிற்கு சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy