சினிமா துறையின் உயரிய அங்கீகரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதினை வழங்கும் அகாடமி குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகாடமி உறுப்பினராக தேர்வாகும் முதல் தென்னிந்தியர் எனும் பெருமைக்கு உள்ளாகியிருக்கிறார் நடிகர் சூர்யா.
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் – Academy of Motion Picture Arts and Sciences ( AMPAS) என்பது சினிமாவை(film) கலை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தோடு இயங்கிவரும் ஒரு அமைப்பாகும். சினிமாவை வளர்த்தெடுக்கவும் மேம்படுத்தவும் பல்வேறு வகையில் பங்களித்துவரும் இந்த அக்காடமியானது ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், படங்கள் என தேர்வு செய்து அவர்களுக்கு விருதையும் வழங்கிவருகிறது. அந்த உயரிய விருதுக்கு பெயர் தான் ஆஸ்கர்.
இந்த அகாடமியின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் board of governors எனப்படும் ஆளுநர்கள் குழுவால் வகுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் இக்குழுவில் உலகம் முழுவதும் சினிமாவின் பல்வேறு துறைகளை சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஆண்டு தோறும் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இதுபோக board of governor-களின் சிறப்பு தேர்வுகளிலும் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த அகாடமி குழுவானது நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒப்பனைக்கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் உள்ளிட்ட 17 கிளைகளாக பிரிக்கக்கப்பட்டுள்ளது. அந்தந்த கிளை தொடர்பான விருதுகளை குறிப்பிட்ட கிளை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
இந்த உறுப்பினர்கள் குழு தொடர்பாக நீண்டகாலமாக இருந்துவந்த சர்ச்சை 2015ம் ஆண்டு வெடிக்க தொடங்கியது. விருது தேர்வு குழுவின் மொத்த உறுப்பினர்களில் 93 சதவீதத்தினர் வெள்ளையர்களாகவும், 76 சதவீதத்தினர் ஆண்களாகவும் இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கருப்பினத்தவர்களுக்கு இந்த குழுவில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை குறிக்கும் வகையில் #OScorSoWhite எனும் ஹாஷ்டாக் உலகளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை 2020ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவோம் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அகாடமி குழு. இந்நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதோடு, பெண்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினர்களுக்கு கணிசமான அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2016 வரை 6,261 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு 9,427-ஆக உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டில் 395 பேர் புதிய உறுப்பினர்களாக அழைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 397 பேருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரபலங்களான நடிகர் சூர்யா, கஜோல் ஆகியவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளனர். அகாடமியின் 17 கிளைகளில் நடிகர்களுக்கான பிரிவில் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் நடிகர் எனும் பெருமைக்கும் பொறுப்புக்கும் உள்ளாகியிருக்கிறார் நடிகர் சூர்யா.
இந்த குழுவில் உறுப்பினராவது அவ்வளவு சுலபம் கிடையாது. இதற்கு ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் இரண்டும் பேர் ஒருவரை முன்மொழியவேண்டும். பிறகு அவர் தகுதியான நபர்தானா என ஆளுநர்கள் அடங்கிய நிர்வாக குழுவால் பரிசீலிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த நபருக்கு அழைப்பு விடுக்கப்படும். இதிலிருக்கும் உறுப்பினர்களால மொத்தம் ஒருவரை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகாடமி விடுத்திருக்கும் இந்த அழைப்பை அடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை வாரி வழங்கிவருகிறது. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் ஆளுமைகளும் சூர்யாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ட்விட்டர் வாயிலாக உளமார வாழ்த்திக்கொண்டார்.
https://twitter.com/mkstalin/status/1542063497395073025
தமிழ் சினிமா கலைஞர்களில் இருந்து ஏர்.ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கியிருந்தாலும் ஒரு தமிழ் படைப்பு இதுவரை ஆஸ்கரின் பரிந்துரை பட்டியலில் கூட இடம்பெற்றதில்லை. படத்தின் ஆக்கம், தரம் இவற்றையெல்லாம் தாண்டி ஆஸ்கருக்கு நுழைய பல்வேறு விதிமுறைகளும் கெடுபிடிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோக பல்வேறு லாபிக்கள் மூலமாகத்தான் விருதிற்கான பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற முடியும் என்கிற கருத்தும் இருக்கிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவால் வார்த்தெடுக்கப்பட்ட மகத்தான கலைஞனான சூர்யா அக்குழுவில் இடம்பெறும் பட்சத்தில் தமிழ் சினிமாவும் பங்கேற்பதற்கான ஒரு தளம் உருவாவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாக கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
– வேல் பிரசாந்த்.







