கருக்கலைப்பின்போது சிறுமி உயிரிழப்பு- மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு நடைபெற்றதால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு நடைபெற்றதால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த மலையனூர் செக்கடி கிராமத்தைச்
சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்,  ரெட்டியார் பாளையம் பகுதியில் உள்ள அரசு
பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய முருகன், அவரை கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது.. இது வெளியே தெரிந்தால் தனக்கு தலைகுனிவு என கருதிய முருகன் அந்த மாணவியிடம் கருவை கலைக்க வற்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  தனது நண்பரான பிரபு என்பவரது துணையுடன் ரெட்டியார் பாளையத்தில் போலி மருத்துவர் காந்தி என்பவரிடம் அந்த சிறுமியை முருகன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காந்தி அந்த சிறுமிக்கு கரு கலைப்பு மாத்திரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மாத்திரை உண்ட சிறிது நேரத்தில் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் செய்வதறியாது திகைத்த முருகன், பிரபு மற்றும் போலி மருத்துவர் காந்தி ஆகியோர் தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றுள்ளனர்.

தானிப்பாடி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  மாணவி  உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது


தகவல் அறிந்து வந்த மாணவியின் பெற்றோர்,  முருகன்
மற்றும் அவரது நண்பர் பிரபு, தவறாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் காந்தி ஆகியோர் மீது தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருக்கலைப்பு முயற்சியால் 10ம் வகுப்பு மாணவியின் உயிர் பறிபோன சம்பவம் தானிப்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.