செல்ல பிராணிகள் வளர்த்தால் ஆபத்தா?

தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள செய்திகளில் ஒன்று நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவு. முதலில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டாலும் புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசித்ததால் உண்டான தொற்றின் காரணமாக நுரையீரல்…

தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள செய்திகளில் ஒன்று நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவு. முதலில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டாலும் புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசித்ததால் உண்டான தொற்றின் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செல்லப் பிராணிகள் வளர்த்தால் ஆபத்தா என்ற கேள்விகளும் முளைக்கத் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன என்பதைப் பார்ப்போம். மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரக் கூடிய செயல்களில் செல்லப் பிராணிகள் வளர்ப்பும் ஒன்று. செல்லப் பிராணிகளுடன்  விளையாடி பொழுதை கழிப்பது , ஒன்றாக படுத்து உறங்குவது என தங்களது நண்பனை போலவும் குழந்தைகளை போலவும் சிலர் வளர்த்து வருவதை பார்த்து இருப்போம். ஆனால், இவர்கள் செல்ல பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து இருக்கிறார்களா என்பது சந்தேகமே. செல்ல பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே நிதர்சனம்.
செல்ல பிராணிகள் வளர்ப்பில் பிரதானமா இருக்கும் பூனை, நாய் போன்ற வீட்டு விலங்குகளைப் போல மற்றொன்று புறா, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகள் வளர்ப்பு. இதில், செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஈடுபடும் நோய் எதிர்ப்பு சக்தி  குறைவர்கள் எளிதில் பாதிப்பிற்குள்ளாவர்கள் .

முதலில் பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் தொற்றுகளை பார்க்கலாம்.

அதிக முடி உள்ள பூனை , நாய் போன்ற விலங்குகள் வீட்டில் இருந்தால் அதில் இருந்து உதிரும் ரோமங்கள் எளிதில் மூச்சுக்குழாயில் சென்று நுரையீரல் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும். மேலும் சிலருக்கு தோலில் அரிப்பு, கொப்பளங்கள் போன்ற ஒவ்வாமை ஏற்படக் கூடும்.

செல்லப் பிராணிகளிடம் இருந்து நோய் கிருமிகள் தொற்று காரணமாக சிலருக்கு உடலில் சிரங்கு ஏற்படக் கூடும். இதனால் விரல் இடுக்கு மற்றும் மூட்டு பகுதிகளில் கொப்பளங்கள் ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். இதேபோல முறையாக பராமரிக்கப்படாமல் அசுத்தமாக இருக்கும் செல்ல பிராணிகளிடம் இருந்து பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான் தொற்று ஏற்படும். இதனால் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்.

இதுமட்டுமின்றி வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் எச்சங்களில் இருந்து குடல் புழுக்கள் , நமது கை மற்றும் நகத்தின் மூலம் வயிற்றுக்குள் சென்று குடல் புழுக்களை ஏற்படுத்தும்.  எச்சங்கள் உடம்பில் பட்டால் அதில் உள்ள புழுக்கள் நேரடியாக தோலில் புகுந்து விடும். இதனால் அதிகப்படியான அரிப்பு ஏற்படும். பூனை, நாய்  போன்ற விலங்குகளை போன்று பறவைகள் வளர்பவர்களுடன் அதிக நெருக்கமாக  இல்லாவிட்டாலும் , பறவைகள் வளர்ப்பில் ஏற்படும் பாதிப்புகளோ மிக அதிகம். அவை உயிருக்கே  ஆபத்தை ஏற்படுத்தும்.
நாம் சுவாசிக்கும் போது பறவை எச்சங்களில் இருக்கும் நுண்ணுயிர்கள், பூஞ்சைகள் போன்றவை  சுவாச குழாய் மூலமாக நேரடியாக நுரையீரலை சென்றடையும்.இது மெல்ல மெல்ல நுரையீரலில் சுருங்கி விரியும் தன்மையை குறைக்கும்.

இதனால் போதிய ஆக்சிஜன் மூச்சுக் குழாய் வழியாக உள்ளே சென்றாலும், அதனை நுரையீரலால் ஏற்றுக்கொள்ள முடியாது. சில ஆண்டுகளில் இவை நுரையீரலை செயலிழக்க செய்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கிளி,  புறா, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பவர்கள் இதுபோன்ற நுரையீரல் பாதிப்பிற்கு அதிகம் ஆளாகின்றனர்.
எனவே பறவைகள் வளர்ப்பவர்கள் மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் தீவிர பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தீவிர பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்துவது கடினம். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய முடியும். வெளிப்புறத்தில் இருந்து நமது உடலில் ஏற்படும் தொற்றுகளை முதலில் வெளிப்படுத்துவது தோல் மற்றும் சுவாசப்பாதை. எனவே செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் தோல் மற்றும் மூச்சு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாமல் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.