முக்கியச் செய்திகள் சினிமா

ஓடிடி விமர்சனம்: ஒரு தெக்கன் தள்ளு கேஸ்

கேரளாவின் மகேஷிண்டே பிரதிகாரம், அய்யப்பனும் கோஷியும், தள்ளுமாலா என சமீபத்திய ஆண்டுகளில் வந்த திரைப்படங்கள் இரண்டு ஆண்கள் அல்லது இரு குழுக்களின் ஈகோ காரணமாக நிகழும் சண்டையை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அந்த வரிசையில் ஒரு தெக்கன் தள்ளு கேஸ் திரைப்படம் இணைந்துள்ளது. என்றாலும் கூட அதன் வேறுபட்ட கதைக்களம் காரணமாக  ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் ஏ.ஆர்.இந்துகோபாலன் எழுதிய அம்மிணி பிள்ளை வீட்டு கேஸ் என்ற சிறுகதையை தழுவி மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’. தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பிஜு மேனன், ரோஷன் மேத்யூ, பத்மபிரியா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீஜித் இயக்கியுள்ளார்.தெற்கு கேரளாவில் உள்ள கடற்கரையோர கிராமம் ஒன்றில் கலங்கரை விளக்கம் பராமரிப்பவர் அம்மிணி பிள்ளை (பிஜு மேனன்). அதே கிராமத்தில் துடுக்குத்தனமாக நண்பர்களுடன் சேர்ந்து சேர்ந்து சுற்றி வருபவர் பொடியன். இவர் அம்மிணி வீட்டின் அருகே வசிக்கும் அவரது உறவுக்கார பெண் வசந்தியை ( நிமிஷா சஜயன்) காதலிக்கிறார். ஒரு நள்ளிரவில் காதலர்கள் தனிமையில் சந்திக்கும்போது பார்த்துவிடும் அம்மிணி, பொடியனை அடித்து துரத்திவிடுகிறார். தன்னை அடித்த அம்மிணியை பழிதீர்க்க நண்பர்களுடன் இணைந்து அவரை கத்தியால் வெட்டுகிறார் பொடியன். உயிர் பிழைத்து வரும் அம்மிணி பொடியன் மற்றும் அவரது நண்பர்களை என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் மாஸ் காட்டிய பிஜு மேனன், இப்படத்தில் அம்மிணி பிள்ளையாக வாழ்ந்துள்ளார். அம்மிணி வரும் காட்சிகள் அனைத்திலும் கம்பீரம் நிமிர்ந்து நிற்கிறது. 45 நிமிடங்கள் ஒரே ஆளாக நின்று அடித்தார், அம்மிணிக்கு தெரியாமல் கிராமத்தில் ஒன்றும் நடைபெறாது என்ற அவரைப் பற்றிய வர்ணனைகள் படம் பார்க்கும் நமக்கு அவர் குறித்த பிம்பத்தை பெரிதாக்குகின்றன.

அனைவரும் பயந்துகொண்டிருக்க ராஜநாகத்தை ஒரே ஆளாக தூக்கி சுழற்றி அடித்தும் கொல்லும் காட்சியில் மாஸ் காட்டும் பிஜு மேனன், மனைவியை பிரிந்து சென்றதால் விரக்தியில் தவிக்கும் காட்சிகளில் உருக வைக்கிறார். என்றாலும் க்ளைமாக்ஸுக்கு முந்தையை காட்சிகளில் தன்னைப் பற்றி புறம் பேசுபவர்களை அடித்து துவைப்பது, அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை அப்படியே நினைவுபடுத்துகிறது.அம்மிணியின் மனைவியாக நடித்துள்ள பத்மபிரியா கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கணவனுடனான காதல் காட்சிகளிலும், அவர் சண்டையிட்டதால் வைராக்கியத்துடன் கோபம் கொண்டு பிறந்த வீட்டுக்கு சென்றுவிடும் காட்சிகளிலும், கணவர் தன்னை பிரிந்து தவிக்கிறார் எனும்போதும் காட்டும் ரியாக்‌ஷன்களில் அசலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அம்மிணி பிள்ளைக்கு சற்றும் குறையாத ஈகோ உடைய கதாபாத்திரம் பொடியனுடையது. தன் நண்பர்கள் அம்மிணியிடம் அடி வாங்கிய பிறகும், தான் அடிவாங்கமாட்டேன் என உறுதியாக நின்று, தலைமறைவாக காட்டில் வாழ்கிறார். பொடியனின் காதலி வசந்தி, தன்னுடைய காதலனுக்காக என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவித்து நிற்கிறார். பொடியனின் நண்பர்களாக வருபவர்கள் செய்யும் செயல்கள் கலகலப்பூட்டுகின்றன. தான் அம்மிணியிடம் அடி வாங்க மாட்டேன் என உறுதி காட்டும் பொடியனின் நண்பன், நள்ளிரவோடு நள்ளிரவாக சென்று அம்மிணியிடம் சரணடைந்து அடி கேட்கும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். திரைப்படத்தின் முக்கிய பலம் ஒளிப்பதிவு. ஒரு கிராமத்தை அப்படியே நமக்கு படம் பிடித்து காண்பித்துள்ளது. நெருப்பு பொறி பறக்கும் இரவு நேரக் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன. பின்னணி இசையும் சிறைப்புற அமைந்துள்ளது. படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.

– த.எழிலரசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

Jayakarthi

தடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

Gayathri Venkatesan

கொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!

Halley Karthik