சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம்
செய்யப்பட்ட நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கில்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (37).
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்த இவர், கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று வழக்கம் போல வேலை முடிந்து மாலை இரு
சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
சீலையம்பட்டி பகுதியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே
மாடு வந்ததால் வடிவேல் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது
தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட வடிவேலு நேற்று உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்ததால் இன்று அவரது இறுதிச் சடங்கு அரசு
மரியாதையுடன் நடைபெற்றது. இன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் நடைபெற்ற
இறுதிச்சடங்கு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பங்கேற்றார்.
உயிரிழந்த வடிவேலுவுக்கு பட்டுலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண்
குழந்தை, பெண் குழந்தை என இரு பிள்ளைகள் உள்ளனர். உடல் உறுப்பு தானம்
செய்தவர்களின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
ரெ. வீரம்மாதேவி







