போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2015 வரை செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது , வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார், உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, உதவியாளர் சண்முகம், அருள் மணி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







