கோடைகால திடீர் உயிரிழப்புகள் – ஆய்வு செய்ய உத்தரவு!

கோடை காலத்தில் நேரிடும் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்…

கோடை காலத்தில் நேரிடும் திடீர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சில அறிவுரைகளை வழங்கியது.

அதன்படி, பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும்,  வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும் குழந்தைகள்,  குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள்,  வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய்பட்டவர்கள் ஆகியோர் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள்,  திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும் எனவும் ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகவும் அறிவுறுத்தப்பட்டது.

அதனுடன் தமிழ்நாட்டில்,  கோடையின் தாக்கத்தால் திடீரென நேரிடும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யவும்,  அதன் விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்தவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.