பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு பின்னர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்கிற பரபரப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் ஓபிஎஸ்.
கடந்த இரண்டு வாரங்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சை வியாபித்திருந்த நிலையில், விடிய விடிய நடைபெற்ற நீதிமன்ற விசாரணை வரை பல்வேறு திருப்பங்களை கடந்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக இந்த பொதுக் குழுக் கூட்டத்தில், ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாவிட்டாலும், பொதுக் குழுவில் தனது பலத்தை நிரூபித்தார் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
தம்மால் ஒப்புதல் வழங்கப்பட்ட 23 வரைவு தீர்மானங்கள் நிராகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டது, தமக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் போன்வற்றால் எரிச்சலடைந்த ஓ,பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பாதியிலேயே பொதுக் குழுவை விட்டு வெளியேறினர். பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பது பொதுக் குழுவில் தெளிவாகியுள்ள நிலையில் அடுத்து ஓ.பன்னீர் செல்வம் என்ன செய்யப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ந்தேதி நடைபெறும் என்றும் அதில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறிவிட்ட நிலையில், அவ்வாறு பொதுக்குழுவை கூட்டுவதை நிராகரித்திருக்கும் ஓபிஎஸ் தரப்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்கிற விவாதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ஓபிஎஸ். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்கியுள்ள திரௌபதி முர்மு, நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சியான அதிமுகவின் சார்பில் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதற்காகத்தன் ஓபிஎஸ் பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம்செல்லும்போது பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வமும் இதைத்தான் கூறினார். ஆனால் இந்த பயணத்தை சுற்றி பல்வேறு யூகங்களும், உலாவருகின்றன. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்து டெல்லியில் பாஜக தலைமையுடன் ஓ.பன்னீர்செல்வம் விவாதிக்க விரும்பலாம் அல்லது அதிமுக பொதுக்குழுவில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட முயற்சிக்கலாம் எனவும் தகவல்கள் உலாவுகின்றன.
-இலட்சுமணன்







