ஜான் பென்னி குயிக் சிலை திறப்பு விழாவுக்கு, ஓபிஎஸ் சொந்த செலவில் வந்திருக்கலாம் என்று அமைச்சர் பெரியசாமி கிண்டலடித்தார்.
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் நினைவை போற்றும் வகையில், அவரின் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்லி நகர மைய பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சிலையை நிறுவ இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலும் பெறப்பட்டு சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலை திறப்பு விழாவுக்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு
முறை பயணமாக லண்டன் சென்று இருந்தார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக
கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்.எல்.ஏக்களான ராமகிருஷ்ணன், மகாராஜன்,
சரவணக்குமார், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்
ஆகியோரும் சென்று இருந்தனர். ஆனால், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவால் சிலை திறப்பு விழா ரத்தானது. அதையடுத்து பென்னி குயிக் சிலையை பார்வையிட்டார். இங்கிலாந்து ராணி எலிசபெத் உருவப் படத்திற்கு மரியாதையும் செலுத்தினார்.

தற்போது, தமிழ்நாடு திரும்பியுள்ள அமைச்சர் பெரியசாமி இன்று சென்னை விமான
நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக்கு நினைவு சின்னமாக சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் அந்த அணை உள்ளது.
லண்டன் சொந்த ஊராக இருந்தாலும் நம் ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த அணையை உருவாக்கி உள்ளார். அவர் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்தவர் முதலமைச்சர் என்பதில் மகிழ்ச்சி. அவரின் பிறந்த ஊரான கேம்பர்லியில் சிலை அமைக்கப்பட்டதற்காக அப்பகுதி மக்கள்
மகிழ்ச்சி அடைந்தனர். சிலை திறப்பு என்பது எல்லாம் ஒன்றும் இல்லை, அது வெறும் சம்பிரதாயம் தான். ஏற்கனவே வைக்கப்பட்ட சிலையை மக்கள் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
விவசாயிகள் 200 பேர் வரை வந்தனர். லண்டன் வருவது என்ன சாதாரண விஷயமா.
விவசாயிகள் வரவில்லை என்பது அரசியலுக்காகச் சொல்லப்படுவது. தமிழகத்தில் விழா இருந்து இருந்தால் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுத்திருப்போம். தங்க தமிழ் செல்வன் அவரது சொந்த செலவில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் தான் அங்கு வந்தார். ஓபிஎஸ் சொந்த செலவில் லண்டனுக்கு வந்திருக்கலாம் என்றார்.
-ம.பவித்ரா







