அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ்தான் பிள்ளையார் சுழி போட்டார்-ஆர்.பி. உதயகுமார்

அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ் தான் பிள்ளையார் சுழி போட்டார் என ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தர்மயுத்தம் முடிந்து…

அதிமுகவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு ஓ.பி.எஸ் தான் பிள்ளையார் சுழி போட்டார் என ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தர்மயுத்தம் முடிந்து ஓ.பி.எஸ் அதிமுகவில் மீண்டும் இணைந்தபோது மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அம்மாவின் மரணத்துக்கான விசாரணை கமிஷன் அமைப்பது, சின்னமாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது, அம்மா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று நிபந்தனை வைத்தார். இந்த மூன்று நிபந்தனைகளையும் எடப்பாடியார் நிறைவேற்றித் தந்தார்.

அவர்களோட ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என இவர் வைத்த நிபந்தனை அடிப்படையில் தான் அவர் அறிவித்தார். தனிப்பட்ட முறையில் அவர் அறிவிக்கவில்லை. இவர்தான் தான் இயக்கத்தில் சேர அவர்களை சேர்க்கக் கூடாது என்றார். இதுதான் உண்மை நிலவரம். அதிமுகவில் இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது யார். அம்மா மறைவுக்கு பிறகு ஏக மனதாக அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிறகு , அந்தப் பதவியை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து செய்தது யார். ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அன்றைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த பஞ்சாயத்துதான் இன்றைக்கு நீண்டு கொண்டிருக்கிறது. ஒன்றரை கோடி தொண்டர்களில் வேறு யாரும் பஞ்சாயத்தைத் தொடங்கி வைக்கவில்லை. அவர் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகும், டி.டி.வி தினகரனோடு அவர் ஏன் ரகசிய உறவாடுகிறார். ஏன் பேசுகிறார். யாரைக் காப்பாற்ற, என்ன விளைவு ஏற்படுத்த அவர் இல்லத்துக்கு சென்று பார்க்கிறார். தலைமை எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். சந்தேகமற்ற தலைமையாக இருக்க வேண்டும்.

அப்பழுக்கற்ற தலைமையாக, மன உறுதியோடு கடைசி மூச்சு இருக்கும் வரை, ரத்தம் சிந்தும் நிலை வரும்போது கூட அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அந்த ரத்தம் தான் அதிமுகவில் எல்லோருக்கும் ஓடுகிறது. புரட்சித் தலைவர் தந்த சோறு, அம்மா தந்த உணவை தந்து வளர்ந்தவர்கள் தான் ஒன்றரை கோடி தொண்டர்கள். வலிமையோடு இருக்கிற தலைமை வேண்டும் என சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. முடிவுகளை மாற்றி மாற்றி சந்தேகத்துடன் இருக்கும் தலைமையை நாங்கள் விரும்பவில்லை. சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையுள்ள தலைமையை விரும்புகிறோம். வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள தொண்டர்களை வழிநடத்தும் தலைமை மன உறுதியோடு இருக்க வேண்டும்.

நம்பியார் திரைப்படத்தில் நடித்தார். நிஜத்தில் நல்லவர். ஓ.பி.எஸ் நல்லவராக இருந்தாலும் தொண்டர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்தவில்லை. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போனில் தொடர்பு கொண்டு எல்லாரையும் அழைக்கின்றனர். இ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக் கொடி காட்டாதவர்களின் நிலை கேள்விக்குறியாகும்.” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.