ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்டவர்களை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்ட பரபரப்பு அடங்குவதற்குள், எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவிலிருந்து நீக்குவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக கடந்த 11ந்தேதி நடைபெற்றப் பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அதிரடியாக நியமனங்களையும், நீக்கங்களையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்து நீக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். மொத்தம் 18 பேரை எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியிலிருந்து நீக்கியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த அறிவிப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா, எஸ்.டி.கே ஜக்கையன், ஆர்.பி.உதயகுமார், ஆதிராஜாராம், திநகர் பி.சத்தியா, எம்.கே.அசோக், வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம், ஆர்.இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா ஆகிய 22 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.