முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

விஸ்வரூபத்திற்கு பிறகு கமல் மேல் பாயும் புகார்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது.  இப்படத்தின் first look, டீஸர், மேக்கிங் வீடியோ,என்று நாளுக்கு ஒரு அப்டேட்டை கொடுத்து ஆடியன்ஸின் எதிர்ப்பார்ப்பை படக்குழுவினர் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் அனிருத் இசையில் கமல்ஹாசனே எழுதிப்பாடிய ‘பத்தல பத்தல’ எனும் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. பல வருடங்களுக்கு பிறகு மெர்சலான ஒரு இசைக்கு கமல் மஜாவாக நடனம் ஆடும் காட்சிகள் அனைத்தும் இணைத்தின் சென்சேஷன் ஆனது. மேலும் வெளியான ஒரே நாளில் யூடியூப்பில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான views-களை கடந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

படத்தின் இசை, நடனமெல்லாம் தாண்டி கமலால் எழுதப்பட்ட பாடல் வரிகள் சென்னை தமிழ் என்று கமலால் நம்பப்படும் சென்னை தமிழில் ஜாலியாக தொடங்கி அப்படியே வண்டியை யூ-டர்ன் போட்டு அரசியலில் ஒரு சுத்து சுத்தியது.

கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே!
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே!
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே..
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!

குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு..
குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு!

போன்ற வரிகள் சர்ச்சையாவதற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்று நேற்றே செய்தி வெளியிட்டோம். குறிப்பாக, மத்திய அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாக ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுவரும் நிலையில், கமல் பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்றியம் எனும் வார்த்தை மூலம் அவர் மத்திய அரசை நேரடியாக தாக்குவதாகவே  கருதப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

சொன்னது போலவே இன்று நடந்துவிட்டது. மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும், சாதிரீதியான பிரச்சனைகளை தூண்டும் விதத்திலும் இருப்பதால், இப்பாடல் வரிகளை நீக்கி கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆன்லைனில் ‘சமூக’ ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து விரைவில் இதுகுறித்து விசாரனை நடத்தப்போவதாகவும் சென்னை காவல்துரை தெரிவித்துள்ளது.

இப்பாடல் வரிகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மாநில பொறுப்பாளர் எஸ்.ஆர்.சேகர், ‘கமலை பரிதாபத்தோடு பார்க்கிறேன். சிறந்த நடிகராக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்துஅதில் தோற்றுப்போய்..பிறகு டிவி புரோகிராமிற்கு சென்று, அங்கேயும் தோற்றுப்போய் செல்லா காசாக மாறிவிட்டார். யாரை சொன்னால் மக்கள் திரும்பிப்பார்ப்பார்கள் என்று எண்ணியே மோடியை பற்றி சொல்கிறார்.  மோடியை தாக்கினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று மோடி மீது பாய்கிறார். மோடி இவர்கள் எல்லாருக்கும் உயிர்கொடுத்துக்கொண்டு இருக்கிறார். மோடி அவரை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் பேசியவர், ‘முதல் வரியில் ஒன்றிய அரசை தாக்கிய கமல், அடுத்த வரியிலேயே சாவி இங்கு திருடன் கையிலேயே எனக்குறிப்பிட்டு தமிழக அரசையும் தாக்கியிருக்கிறார் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும் படி சொல்லிக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டு திமுகவிடம் கமலை கோர்த்துவிட்டு சென்றார் எஸ்.ஆர். சேகர்.

சினிமாவில் பிரச்சனைகளையும் வழக்குகளையும் சந்திப்பது கமலுக்கு புதிதல்ல. கமலின் ‘ஹே ராம்’ திரைப்படமே பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் ஆதிக்க சாதியினரை  தூக்கிப்பிடிப்பதாக குற்றம் சாட்டி வைத்து செய்யப்பட்டார் கமல். விஸ்வரூபம் சர்ச்சையின் போது இந்த நாட்டை விட்டே செல்கின்றேன் என்றுகூட பெட்டியை கட்டினார்.

விஸ்வரூபம் வெளிவந்து பல அண்டுகள் கடந்த நிலையில் விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய சர்ச்சை கணக்கை தொடங்கியுள்ளார் கமல். தமிழ் மக்களுக்கு அந்நியப்பட்ட கதைக்களத்துடன் அமைந்திருந்த, விஸ்வரூபம் அதன் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களாலேயே மாபெரும் வெற்றி பெற்றதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், என்னதான் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தாலும் ‘ஒருவேல படம் மொக்கையா வந்துட்டா’ என லேசான பயம் கமல் ரசிகர்களுக்கு இருக்கவே செய்தது. இனிமே அந்த பயம் இல்லை எனவும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆவது உறுதி எனக்கூறும் கமல் ரசிகர்கள், ‘பத்தல பத்தலண்ணு சொல்லியே பத்தவச்சிட்டிங்களே ஆண்டவரே’ என்றுவும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்!

  • வேல் பிரசாந்த்
Advertisement:
SHARE

Related posts

காத்துவாக்குல உலக நாயகியாகும் சமந்தா!

Vel Prasanth

மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்பு

Ezhilarasan

அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்?

Ezhilarasan