ஒரு தலையாக காதலித்த பெண்ணை கத்தியால் குத்த முயன்ற போது அதனை தடுக்க முயன்ற அவரது சித்திக்கு கத்திகுத்து விழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் தனியார் நிதி நிறுவனத்தில் திருவாத்தூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் நல்லூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.
அவரை கார்த்திக் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் கார்த்திக்கின் காதலை அந்த பெண் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.
இதனால் விஷம் அருந்திய கார்த்திக் தனது நண்பர்களுடன் நல்லூரில் உள்ள இளம்பெண் வீட்டுக்கு சென்று தகராறில ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு இளம் பெண்ணை குத்த முயற்சி செய்து உள்ளார். அதை தடுக்க சென்ற சித்தி ஜோதிக்கு கழுத்தில் கத்திகுத்து விழுந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் மற்றும் அவர் நண்பர் ஜெய்சங்கர் இருவரையும் செய்யூர் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே விஷம் அருந்தி இருந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.
அவர் செய்யூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ஆபத்தான நிலையில் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய அப்பு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







