நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு ஒதுக்க வேண்டும் என ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் முல்லைபெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் முருகன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாய கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கூடுதல் சாகுபடி மேற்கொள்வது எப்படி எனவும், புதிய யுக்திகளை விவசாயத்தில் கையாண்டு இயற்கை விவசாயத்தில் சாதித்து காட்டிய இயற்கை விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்கு செப்டம்பர் மாதம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசை வலியுத்தப்பட்டது. முல்லை பெரியாறு அணையில் 152 அடியாக
தேக்கவேண்டும். மேலும் தேசிய நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை, பருவ காலங்களின் போது விவசாய பணிகளுக்கு ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அணுக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்







