அமலாக்கத்துறையை ஏவி நடவடிக்கை எடுப்பவர்கள் மீதும் அதே அமலாக்கத்துறை ஒருநாள் பாயும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச சொன்னால் பிரதமர் மோடி வெளியில் பேசியது ஜனநாயகப் படுகொலை.
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட போது பிரதமர் மோடி சுற்றுலா சென்று மற்ற நாட்டுத் தலைவர்களை பார்க்கிறார். மணிப்பூர் கலவரம் தற்போது தான் பிரதமருக்கு தெரிகிறதா?
உளவுத்துறை என்ன செய்கிறது? நாட்டில் 100க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் கட்டுவதை விளம்பரம் செய்வது போல, இதையும் விளம்பரம் செய்யலாம்.
இந்தியா கூட்டணியில் திமுக, மம்தா உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.ஆனால் தேசிய
ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்களை பாருங்கள் ஒரே உறுப்பினராக இருக்கக்கூடிய ஜி.கே.வாசன் இருக்கிறார்.
அண்ணாமலை ஒரு நடிகர். அவர் நடைபயணம் போகிறாரா? பஸ் பயணம் போகிறாரா? ராகுல் காந்தியைப் போல ஆகிவிடலாம் என நினைக்கிறார்.
அமலாக்கத்துறையை ஏவி இன்று நடவடிக்கை எடுக்கின்றனர். இதே நிலை மோடிக்கும்
வரும். மோடி மீது பல வழக்குகள் இருக்கின்றன. இதே அமலாக்கத்துறை மோடி மீதும் பாயும். அமித்ஷா மகன் பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததை போல் தற்போது இருக்கிறாரா?
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.







