”ஒரே நாடு , ஒரே தேர்தல்” திட்டம் குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது . மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 10ம்தேதி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதன் பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் நிறைவடைந்தது. மழைக்கால கூட்டத்தொடரில் கிட்டத்தட்ட 24 மசோதாக்கள் நிறைவேற்றியதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இந்த நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும். மேலும் 5 அமர்வுகளாக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக இந்த சிறப்பு கூட்டத் தொடர் என அரசியல் கட்சிகள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பான அறிவிப்பு இந்த அறிவிப்பு வெளியாகிய அடுத்த நாளே “ஒரே நாடு, ஒரே தேர்தல் “ தொடர்பாக ஆய்வு செய்ய குழுவை அமைத்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாகவே பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் வரவேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையில் பரிந்துரைகள் வழங்க குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு , ஒரே தேர்தல் திட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரைக்கும் அறிக்கைகள் முன்வைத்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.