கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் என பதிவிட்டுள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மகாபலி மன்னரின் நினைவாக கொண்டாடப்படும் இது, கருணை, இரக்கம் மற்றும் தியாகத்தின் மூலம், காலத்தால் அழியாத மதிப்புகளை நினைவூட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.







