ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து கேரளா செல்லும் விமானங்களிள் பயணக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஓணம் பண்டிகை வரும் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டஙகள் தற்போதே களை கட்ட தொடங்கிவிட்டன. பள்ளி, கல்லூரிகளில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவுகள் முடிவுற்ற நிலையில், பெரும்பாலானோர் விமானங்களில் தங்கள் சொந்த கைகளுக்கு செல்கின்றனர்.
இதனால், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூா் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையடுத்து விமான கட்டணங்களும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரையாக உயர்ந்துள்ளது.சென்னை-கொச்சிக்கு வழக்கமான நாள்களில் ரூ.2,962 கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், தற்போதைய கட்டணம் ரூ.6,500 முதல் ரூ.10,243 வரை வசூலிக்கப்படுகிறது. இதுபோல சென்னை-கோழிக்கோடுக்கு வழக்கமான நாள்களில் ரூ.3,148 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் தனியார் பேருந்துகளிலும் வழக்கமான நாட்களை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விடுமுறை, திருவிழா காலங்களில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி கொள்ளை அடிப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நிலையான கட்டண முறையை (Fixed fare) அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






