தீபாவளியை முன்னிட்டு சென்னையில் காவலர் குடியிருப்பு மற்றும் அரசு
அலுவலகங்களில் நடமாடும் சிறைச்சந்தை மூலம் சிறையில் கைதிகள் தயாரிக்கும்
பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் 57 வகையான
பொருட்களை விற்பனை செய்யும் வகையில், எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை
அலுவலகத்தில் ‘சிறை சந்தை’ என்ற பெயரில் புதிய விற்பனை நிலையத்தை கடந்த ஜூன்
மாதம் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இந்த விற்பனை நிலையத்தில் சமையல் எண்ணெய், வீட்டு உபயோக பொருட்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துணிகள், திருநெல்வேலி அல்வா, கடலை மிட்டாய், இட்லி பொடி என 57 வகையான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறைவாசிகள் தயாரிப்பதால் இது வெளிச்சந்தையை விட மிக குறைந்த விலையில் உயர்ந்த தரத்தில் இருக்கும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக
நடமாடும் சிறைச்சந்தையை சிறைத் துறையினர் ஆரம்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை அரசு அலுவலக வளாகங்களில் ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
தமிழக டிஜிபி அலுவலகத்தில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு அடுத்த கட்டமாக
எழிலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொருட்களை வாங்கும் வண்ணம் இந்த நடமாடும் சிறைச் சந்தையை அமைத்துள்ளனர். இவ்வாறாக சென்னையில் உள்ள காவலர் குடியிருப்புகள், அரசு அலுவலகங்களில் இந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டு
சிறைத்துறையினர் விற்பனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் பொதுமக்களிடையே சிறையில் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை
அதிகரிக்கும் வண்ணம் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். நடமாடும் சிறை
சந்தையில் பொருட்களை வாங்குபவர்கள் தொடர்ந்து வாங்குவதற்கு தலைமை அலுவலகத்தை அணுகுவதன் மூலம் விற்பனை அதிகமாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பொருட்கள் விற்பனை ஆவதாக சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்துள்ளார்.
சிறை துறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறைந்த விலையில் தரமாக
விற்கப்படுகிற காரணத்தினால் பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர். ஃப்ரீடம்
என்ற பெயரில் உணவுப் பொருட்கள், துணிகள், ஆயில்கள் ஆகியவை விற்கப்படுகின்றன.
விரைவில் சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதற்கான ஆன்லைன்
விற்பனைக்காக செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில்
தெரிவித்துள்ளனர்.
தீபாவளி காரணமாக விற்பனை அதிகரிப்பதற்கு ஏற்ப சிறைகளில் பொருட்கள் தயாரிப்பும் அதிகரிக்கப்படும் எனவும் இதனால் சிறைவாசிகள் பலன் பெறுவார்கள் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் செயல்படுத்தப்பட்ட நடமாடும் சிறைச்சந்தை வரவேற்பை
அடிப்படையாக வைத்து மத்திய சிறைகள் இருக்கும் மாவட்டங்களிலும் அதன்
சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் நடமாடும்
சிறைச்சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.







