அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ள நேற்று வெளியிடப்பட்ட இணையதள முகவரி திடீர் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக http://www.aoboa.co.in என்ற வலைதளத்தில் ஆன்லைனில் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பும் தங்களது சங்கம் சார்பில் தனியாக கட்டண பட்டியலை வெளியிட்டிருந்தது. இரண்டு சங்கங்களும் வெளியிட்டிருந்த பேருந்து கட்டணத் தொகை மாறுபட்டிருந்தது.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தைக் காட்டிலும், இரண்டு மடங்கு கூடுதலாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் கட்டணம் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் இணையதள முகவரி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆம்னி பேருந்து கட்டண விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கட்டணத் தொகையை பார்ப்பதற்கான தங்களது வலைதள முகவரி முடங்கி இருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த இணையதளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








