சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து வைக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததால், டிசம்பர் 15-ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பல நாடுகளிலும் பரவத் தொடங்கியதால், 15 ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து தொடங்காது என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சர்வதேச விமான பயணிகள் சேவைக்கான தடை , ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த தடை, சா்வதேச சரக்குப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளிக்கும் சிறப்பு சேவைகளுக்குப் பொருந்தாது என்றும் விமான கட்டுப்பாட்டகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமான சேவைகள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் உள்பட 32 நாடுகளுக்கு மத்திய அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி விமான சேவையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








