மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பாதாள சாக்கடையில் விழுந்த முதியவர் பலி!

சென்னையில் மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பாதாள சாக்கடையில் விழுந்த முதியவர் உயிரிழந்தார். சென்னையை அடுத்த உள்ளகரம் மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள பாதாள…

சென்னையில் மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பாதாள சாக்கடையில் விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த உள்ளகரம் மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களை ஓரமாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட 5 அடி ஆழம் கொண்ட கான்கிரீட் பள்ளத்தில் முதியவர் ஒருவர்
நிலைதடுமாறி உள்ளே விழுந்தார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் முதியவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக
தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மடிப்பாக்கம் போலீசார் முதியவரின் உடலை
மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உள்ளகரம் பாலம்மாள் நகரைச் சேர்ந்த நாராயணன் (74) என்பது தெரியவந்தது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.