தேனி அருகே புறம்போக்கு நிலங்களைத் தனிநபர்களுக்குப் பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில் முன்னாள் வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில், வடவீர நாயக்கன் பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களுக்கு, தனிநபர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 180 ஏக்கர் வரையிலான நிலங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதால், மோசடியில் ஈடுபட்ட நில அளவையர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் என 7 பேரைக் கடந்த அக்டோபர் மாதம் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனிடையே, மோசடியில் வருவாய்க் கோட்டாட்சியருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மோசடி நடந்த காலத்தில் பணியில் இருந்த பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், நில அளவையர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரது மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








