ஒடிசாவில் நடைபெற்ற கோரமண்டல் விரைவு ரயில் விபத்து குறித்து பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பஹனகா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன.
தடம்புரண்ட ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டாவாளத்தில் விழுந்த கிடந்ததில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்தபூர் – ஹவுரா விரைவு ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதனால் யஷ்வந்த்பூர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் நடந்த இந்த கோர விபத்து குறித்து உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், ” ரயில் விபத்து குறித்த படங்கள் மற்றும் செய்திகள் வேதனை அளிக்கிறது. தங்களது நேசத்திற்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், கனட மக்கள் இந்திய மக்களுக்கு உடன் இருப்பார்கள்” என பதிவிட்டுள்ளார்.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியாகியிருப்பது வருத்தமளிக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் மற்றும் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கோரோசி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தைவான் அதிபர் சாய் இங்-வென் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிராத்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா மற்றும் ஒடிசா மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/AmbRus_India/status/1664862045462843392
மேலும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒடிசாவில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.







