” கை,கால்களை இழந்த உடல்கள் ; தண்டவாளம் முழுக்க ரத்தக்கரை..” என ஒடிசா ரயிலில் உயிர் தப்பிய அனுபவ் தாஸ் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் வழக்கம் கொண்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது.
கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணித்து உயிர் தப்பிய அனுபவ் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ ஹவ்ரா-சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயிலில் சக பயணியாக பயணித்த நான் அதிர்ஷ்டவசமாக பெரும் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளேன். யஷ்வந்த்பூர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன, கோரமண்டல் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. இது மிகப்பெரிய விபத்து.
கிட்டத்தட்ட 250 நபர்கள் வரை உயிரிழந்ததை நேரில் கண்டேன். கை , கால்களை இழந்த உடல்களையும் , இரத்தக் கரைகள் நிரம்பிய தண்டவாளத்தையும் எனது கண்களால் பார்த்தேன். இந்த கோர சம்பவத்தை என்னால் வாழ்நாள் முழுக்க மறக்கவே இயலாது. கடவுள்தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டும். எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.







