முக்கியச் செய்திகள் இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி இடிப்பு!

ஒடிசாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2-ம் தேதி மாலை 3:30-க்கு  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது.  இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில்  இதுவரை 278 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தின்போது, அருகிலுள்ள பாஹாநாகா உயர்நிலைப் பள்ளி கட்டடம் தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டு நாள்களுக்குப் பிறகு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவை மாற்றப்பட்டன. சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால், மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உள்ளூர் மக்களும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனா்.

65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அப்பள்ளியில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ரேய பாவ்சாகேப் ஷிண்டே ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ”மாணவர்கள் மத்தியில் அச்சத்தையும் மூடநம்பிக்கையையும் பரப்ப வேண்டாம். அதற்கு பதிலாக இளம் மனங்களில் அறிவியல் சார்ந்த சிந்தனைகளை வளர்க்க வேண்டும்” என்று கூறினார்.

அதேநேரம், பழமையான கட்டடம் என்பதுடன் மாணவர்களும் பள்ளிக்கு வரத் தயங்குவதால் அதனை இடிக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரப்பிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மாநில தலைமைச் செயலர் உள்பட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் நவீன் பட்நாயக், தற்போதைய பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, நூலகம், எண்ம வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாதிரி பள்ளியாக கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தார். இதனைதொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram