2024-ம் ஆண்டில் மக்களவைத் தோ்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியிருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக அரசின் பதவிக் காலம் வரும் 2024-ம் ஆண்டு மே மாதம் முடிகிறது. இதனால், 2024-ம் ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரம் கூறியதாவது: “மக்களவைத் தோ்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு முதல்கட்ட ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாதிரி வாக்குப் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்கு பதிவு செய்து அதன் செயல்பாடு ஆய்வு செய்யப்படுவதோடு, ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு வருகிறது.
மாதிரி வாக்குப் பதிவு மற்றும் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வுப் பணிகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த இயந்திரங்களைத் தயாரித்த பாரத் மின்னணு நிறுவனம் மற்றும் இந்திய மின்னணு காா்ப்பரேஷன் நிறுவன பொறியாளா்கள் மேற்கொள்வார்கள்.
மேலும், தோ்தல் ஆயத்தப் பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையம் அட்டவணை ஒன்றையும், வழிகாட்டு நடைமுறையையும் வெளியிடும். மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் இதை முறையாகப் பின்பற்ற வேண்டும். முதல் கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா், தெலங்கானா, மத்திய பிரதேசம் மாநிலங்களிலும், இடைத்தோ்தல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தொகுதிகளிலும் இந்தத் தோ்தல் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது வயநாடு (கேரளா), புணே மற்றும் சந்திராபூா் (மகாராஷ்டிரம்), காஜிபூா் (உத்தர பிரதேசம்), அம்பாலா (ஹரியாணா) மக்களவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.” இவ்வாறு அந்த வட்டாரம் தெரிவித்தது.