ஒடிசா ரயில் விபத்து – தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் விவரம் வெளியீடு!!

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும்…

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி தொடர்பு கொள்ள முடியாத 8 தமிழர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

மேலும், மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும், பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தெற்கு ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு, அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களின் விவரம் : 

1. நாரகானி கோபி (34)

2. கார்த்திக் (19)

3. ரகுநாத் (21)

4. கமல் (26)

5. அருண் (21)

6. ஜெகதீசன் (47)

7. மீனா (66)

8. கல்பனா (19)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.