அணுகு தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோரமண்டல் விரைவு ரயில் மோதியதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா, ”முதற்கட்ட விசாரணையில் சிக்னல் பிரச்னை காரணமாக விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. விரிவான அறிக்கையை ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கேட்டுள்ளோம். முழு விவரம் கிடைக்காமல் தகவல்களை தவறாக பரப்பக்கூடாது என்பதற்காக காத்திருக்கிறோம்.
ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதாக பரப்பப்பட்ட தகவல் தவறானது. அணுகு தடத்தில் (loop track) நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. கோரமண்டல் ரயில் மட்டுமே விபத்துக்குள்ளானது. அது சரக்கு ரயிலில் மோதியதால் மட்டுமே விபத்து ஏற்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
128 கி.மீ வேகத்தில் இரும்புபொருட்கள் இருந்த சரக்கு ரயிலில் மோதியதால் ஏற்பட்ட விபத்து தான் இது. அதன் காரணமாகவே மற்றொரு ரயிலும் தடம் புரண்டது. முழு வேகத்தில் மோதியதில் கோரமண்டல் விரைவு ரயிலின் இன்ஜின் சரக்கு ரயிலின் மீது ஏறி மற்ற பெட்டிகள் தடம் புரண்டன” என்று தெரிவித்தார்.








