ஒடிஷாவின் பூரி நகரில் ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியதை அடுத்து அங்கு திருவிழா களைகட்டியுள்ளது.
ஒடிஷாவின் கடற்கரை நகரான பூரியில் ஆண்டுதோறும் ஜகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் ரத யாத்திரை பூரியில் தொடங்கியுள்ளது.
கிருஷ்ண பகவானின் மற்றொரு பெயரே ஜகந்நாதர். பூரியில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்திற்கு குண்டிச்சா ஆலயம் என்று பெயர். இங்கு அவரது சகோதரர் பலரானுக்கும், சகோதரி சுபத்திரைக்கும் ஆலயம் உள்ளது.
பூரி நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற சகோதரி சுபத்திரையின் விருப்பத்திற்கு இணங்க அவர்கள் மூவரும் ரதத்தில் வலம் வரும் விழாவே ரத யாத்திரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மூவரும் தனித்தனி ரதத்தில் நகர் வலம் வருவார்கள். ஜகந்நாதரின் ரதத்திற்கு நந்திகோஷா என பெயர். இது 16 சக்கரங்களைக் கொண்டது.
பலராமரது ரதத்திற்கு தலத்வாஜா என்று பெயர். இது 14 சக்கரங்களைக் கொண்டது.
சுபத்திரையின் ரதத்திற்கு தர்பதாலனா என்று பெயர். இது 12 சக்கரங்களைக் கொண்டது.
ரத ஊர்வலத்தின்போது ஜகந்நாதர் மற்றும் பலராமரது ரதங்களுக்கு நடுவே சுபத்திரையின் ரதம் செல்லும்.
குண்டிச்சா ஆலயத்தில் இருந்து இன்று புறப்பட்ட மூன்று ரதங்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லட்சுமி தேவி ஆலயமான மவுசி மா ஆலயத்திற்குச் செல்லும்.
அங்கேயே 7 நாட்கள் ரதங்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் அப்பகுதி பக்தர்கள் மூவருக்கும் பிடித்தமான உணவுப் பொருட்களை நிவேதனம் செய்து வழிபடுவார்கள். 7 நாட்களுக்குப் பிறகு அங்கிருந்து ரதம் மீண்டும் குண்டிச்சா ஆலயத்திற்கு ரதங்கள் திரும்பும்.
இந்த திருவிழாவில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருக்கிறார்கள்.
இதனால், பூரி நகரம் விழாக்கோளம் பூண்டிருக்கிறது.