அமெரிக்க வரலாற்றில் தனி முத்திரை பதித்த ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிறந்தநாள் இன்று. 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் அதிபராக இருமுறை பதவி வகித்தவர். அமெரிக்காவின் முதல் கருப்பின அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா, ஹவாய் மாகாணத்திலுள்ள…

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிறந்தநாள் இன்று. 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் அதிபராக இருமுறை பதவி வகித்தவர்.

அமெரிக்காவின் முதல் கருப்பின அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா, ஹவாய் மாகாணத்திலுள்ள ஹொனலூலுவில் பிறந்தார். 1983-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர், சிகாகோவில் வழக்கறிஞராகவும் ஒரு சமூக அமைப்பாளராகவும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1988-ம் ஆண்டில், ஹார்வர்டு சட்டப் பள்ளியில், அதன் சட்ட மதிப்பாய்வு குழுவின் முதல் கறுப்பினத் தலைவராக ஒபாமா இருந்தார்.

2009-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கைன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒபாமா பதவியேற்ற முதல் இரண்டு ஆண்டுகளில், சட்டம் தொடர்பான பல முக்கிய மசோதாக்களில் கையெழுத்திட்டார். இவர் அமல்படுத்திய அமெரிக்க மீட்பு மற்றும் மறு முதலீட்டு சட்டம் மற்றும் வரி நிவாரணம், வேலையின்மைக்கான காப்பீடு திருத்த மசோதா ஆகியவை பொருளாதார ஏற்றத்திற்கு தூண்டுதலாக செயல்பட்டது என்றே கூறலாம்.

உலக அமைதியில் நம்பிக்கை கொண்ட ஒபாமா, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளும் புதிய அணு ஆயுதங்களை தயாரிப்பதை வெகுவாக குறைத்தார். மேலும், ஈராக் போரில் ராணுவ செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். அதிபராக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2013-ல் குடியரசுக் கட்சி வேட்பாளரான மிட் ரோம்னியைத் தோற்கடித்து, மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். இந்த காலப்பகுதியில், LGBT அமெரிக்கர்களுக்கான உரிமைகளுக்கு ஆதரவாக ஒபாமா ஊக்குவித்தார். அவரது நிர்வாகம் அமெரிக்க அரசியலமைப்புக்கு முரணான ஒரே பாலின திருமணத் தடைகளை நீக்குமாறு, உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியது. பிறகு 2015-ல் ஒரே பாலின திருமணம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

ஒபாமா அதிபராக இருந்த காலத்தில், ​​அவர் மிகவும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டார். வெளிநாடுகளில் அமெரிக்காவின் நற்பெயரும், அமெரிக்க பொருளாதாரமும் கணிசமாக மேம்பட்டது. ஒபாமாவின் அதிபர் பதவிக்காலம் பலவகையிலும் அமெரிக்காவுக்கு பொதுவாக சாதகமாகவே இருந்தது என கூறலாம். ஒபாமா தனது பதவிக் காலத்தில் இந்தியாவுக்கு இருமுறை வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றாசிரியர்கள், அரசியல் விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களிடையே ஒபாமாவை பற்றிய மதிப்பீடுகள், அவரை அமெரிக்க அதிபர்களிடையே ஒரு உயர்மட்டத்தில் வைக்கச் செய்துள்ளன.

பேச்சாற்றல் மிக்க பாரக் ஒபாமா, அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், பிறருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் முன்னுதாரண நபராகவும் கொண்டாடப்படுகிறார்.

ஜனவரி 20, 2017-ல் ஒபாமா தனது 55-வது வயதில், அமெரிக்க அதிபர் பொறுப்பில் இருந்து விடைபெற்றார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கட்டுரையாளர்: ரேஷித்தா லஷ்மி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.